சென்னை: வங்கதேசம் விடுதலைக்காக, 1971ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே 13 நாள்கள் போர் நடைபெற்றது. இதில், 93 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பர் 16ஆம் தேதி இந்தியாவிடம் சரணடைந்தனர். போரின் முடிவில் வங்கதேசம் பாகிஸ்தானிலிருந்து விடுதலை பெற்று தனி நாடானது.
இந்தப் போரில் இந்தியப் படை வீரர்கள் எட்டு லட்சத்து 60 ஆயிரம் பேர் பங்கேற்று, மூன்றாயிரத்து 843 பேர் உயிர்த் தியாகம் செய்தனர். 12 ஆயிரம் பேர் படுகாயமடைந்தனர்.
இந்தப் போரில் இந்திய ராணுவம் வெற்றிபெற்றதன் நினைவாகவும், உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்வகையிலும் ஆண்டுதோறும் டிசம்பர் 16ம் தேதி, 'விஜய் திவாஸ்' அனுசரிக்கப்படுகிறது.
டிசம்பர் 19 வரை நினைவுச் சின்னம் திறப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றியின் பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், இன்று (டிசம்பர் 16) நாடு முழுவதும் 'ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்' கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டு போரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
பொதுமக்களும் மரியாதை செலுத்தும்விதமாக இன்று காலை 10 மணிமுதல் டிசம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணி வரை போர் நினைவுச் சின்னம் திறந்துவைக்கப்படுகிறது. பொதுமக்கள் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள சிறப்பு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
தக்க்ஷின் பாரத் ராணுவ தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்டினென்ட் ஜெனரல் ஏ. அருண் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ. வேலு, தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: முப்படைத் தளபதிகள் குழுத் தலைவரானார் நரவணே