கடந்த சில மாதங்களாக விஜய் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகள் தொடர்சியாக வெளிவந்த வண்ணம் இருந்து. நடிகர் விஜய் அரசியல் பஞ்ச் பேசுவதை படத்தில், பட இசை வெளியீட்டு விழாக்களோடு நிறுத்திக்கொள்வார்.
ஆனால் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து அரசியல் கருத்துகள் முன்வைத்து வந்தார். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய தளபதி விஜய் இயக்கம் என்ற பெயரில் கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக வெளியான செய்தியால் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. விஜய்யின் தந்தை அக்கட்சிக்கு பொதுச்செயலாளர் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் நடிகர் விஜய் காட்டமாக அறிக்கை வெளியிட்டார். அதில், எனக்கும் என் தந்தை தொடங்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரசிகர்கள் யாரும் அக்கட்சியில் இணைய வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் விஜய் ரசிகர்கள் சிலரும் எஸ்.ஏ.சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அரசியல் ரீதியாகவும், சர்சையாக போஸ்டர்கள் ஒட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து விஜய் நவம்பர் 10ஆம் தேதி அவரது பனையூர் இல்லத்தில் ரசிகர் மன்ற மாவட்ட செயலாலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் விஜய் பல எச்சரிக்கைகள் விடுத்ததாக கூறப்படுகின்றது. குறிப்பாக விஜய் புகைப்படம், இயக்கத்தின் பெயர், கொடி உள்ளிட்டவைகளை ரசிகர் மன்ற பொறுப்பாளர்களின் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும் என்றும், அவ்வாறு இல்லையென்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தமிழ்நாடு, மாநிலம், நாடு வாரியாக புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டகளுக்கு மாவட்டத் தலைவர், இளைஞரணி தலைவர் என தனித்தனியாக நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதே போல் ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, இலங்கை பகுதிகளுக்கும் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.