தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசு அதிகாரிகளுக்கு பெருமளவில் லஞ்சம் பரிசுப் பொருளாகவும், பணமாகவும் கொடுக்கப்படுகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் வந்தது. இதனையடுத்து அதைத் தடுக்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சிறப்புச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஓர் அங்கமாக, சென்னை உயர் நீதிமன்றம் பின்புறம் அமைந்துள்ள எஸ்பிளனேடு தீயணைப்பு நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இதில், தீயணைப்பு நிலையத்தின் தலைமை அலுவலர் ராஜேஷ்கண்ணா கணக்கில் வராமல் கையில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும், சுப்பிரமணி என்னும் நபர் ஒரு லட்சம் ரூபாய் கையில் வைத்தவாறு தீயணைப்பு நிலையத்திலிருந்ததாக கூறப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அதே பகுதியில் பட்டாசுக் கடை அமைக்க அனுமதி வழங்குவதற்காக ராஜேஷ்கண்ணா தன்னிடம் ஒரு லட்ச ரூபாய் கேட்டதாகவும் அதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை தான் கொண்டு வந்ததாகவும் லஞ்ச ஒழிப்பு காவலர்களிடம் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
இதற்கு எஸ்பிளனேடு தீயணைப்பு நிலைய தலைமைக் காவலர் ராஜேஷ்கண்ணா மறுப்பு தெரிவிக்க இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்பு துறையினரின் தொடரும் வேட்டை!