தமிழ்நாடு காவல் துறையில் வாக்கி டாக்கி, சிசிடிவி, டிஜிட்டல் செல்ஃபோன்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்தப் பணிகளுக்கான டெண்டரை, தமிழ்நாடு காவல் துறையில் உள்ள தொழில்நுட்ப சேவை பிரிவு மேற்கொண்டது.
இந்நிலையில், டெண்டர் கொடுத்ததில் 300 கோடி ரூபாய்வரை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்தனர்.
300 கோடி ரூபாய் முறைகேடு
குறிப்பாக, வி.லிங்க் என்ற நிறுவனத்திற்கு மட்டுமே அதிகளவில் டெண்டர் விடப்பட்டதில் தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட தொழில்நுட்ப பிரிவு எஸ்.பி அன்புசெழியன், ஏ.டி.எஸ்.பி. உதயசங்கர், ரமேஷ் உட்பட 14 காவல் துறை அலுவலர்களின் இடங்களிலும், டெண்டர் எடுத்த வி.லிங்க் உட்பட 2 நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டெண்டர் முறைகேடு
தொடர்ந்து, பல கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்.பி. அன்புசெழியன், ஏ.டி.எஸ்.பி உதயசங்கர், ரமேஷ் உள்ளிட்ட 14 பேர் மீதும், 2 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தது.
ஆனால், இதில் காவல் துறை அலுவலர்களுக்கு தொடர்பு இருப்பதால் இவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது லஞ்ச ஒழிப்புத் துறை.
குறிப்பாக 2014ஆம் ஆண்டு முதல் 2019வரையிலான காலகட்டத்தில் விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோடம் வாங்கியதில் மோசடி
அதன்படி, எஸ்.பி. அன்புசெழியன் மற்றும் ஏ.டி.எஸ்.பி. ரமேஷும் 2015-16ஆம் ஆண்டு மோடம் போன்ற கருவிகள் வாங்கிய விவகாரத்தில், போலி ஆவணங்களை பயன்படுத்தி வி-லிங்க் நிறுவனம் பெயரில் 1.73 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் பெற்றுள்ளனர்.
அதேபோல், 2016-17ஆம் ஆண்டும் 76 லட்ச ரூபாய் மதிப்பில் மோடம் வாங்குவதற்கான டெண்டரிலும் போலி ஆவணம் மூலம் டெண்டர் பெற்றதும் தெரியவந்துள்ளது.
அதன் பின், 2018-19ஆம் ஆண்டு 128 சிசிடிவி, அது தொடர்பான கருவிகள் என சுமார் 3.87 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரிலும் முறைகேடு செய்துள்ளனர்.
குறிப்பாக 2017ஆம் ஆண்டு 1767 டேப்கள், கணினி மற்றும் 1300 5ஜி இணைய தொடர்புக்காக விடப்பட்ட டெண்டரிலும, விதிகளை மீறி முறைகேடாக தொழில்நுட்ப அறிக்கை சமர்ப்பித்து முறைகேடு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் ரூ.63.42 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், 2018-19ஆம் ஆண்டில் 5 மெக்கர்ஸ் எனப்படும் கருவிகள் வாங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது.
டெண்டரில் பங்குபெற முடியவில்லை
முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனமான வி- லிங்க் நிறுவனம், வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகு வேறு எந்த அரசு டெண்டரிலும் பங்கு பெற முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 4 முக்கியமான டெண்டர்களில் அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில் தொடர்புடைய அன்புச்செழியன் உள்ளிட்ட மற்ற அலுவலர்கள் இதுவரை பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை.
அன்புச்செழியன் மட்டும் வண்டலூரில் உள்ள பயிற்சி அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற காவல் துறையினர் அனைவரும் டிஜிபி அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில் தொடர்ந்து பணிபுரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வி- லிங்க் நிறுவனம் மட்டுமல்லாது மற்றொரு நிறுவனத்திற்கும் இந்த முறைகேட்டில் தொடர்புள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
இணையத்தில் பதிவேற்றம் செய்யாத எப்ஐஆர்
அதேபோல், வாக்கி டாக்கிகளுக்கு பேட்டரிகள் வாங்கிய விவகாரத்திலும் (அங்கீகாரமில்லாத நிறுவனங்களிடம் அதிக விலைக்கு வாங்குதல்) மோசடி நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பல்வேறு முக்கிய வழக்குகள் தொடர்பான முதல் தகவல் அறிக்கை லஞ்ச ஒழிப்புத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், காவல் துறையில் நடந்த இந்த முறைகேடு தொடர்பான முதல் தகவல் அறிக்கை இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை இணையத்தில் ஏன் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்!