சென்னை போக்குவரத்து காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தங்களது குறைகளை வாரந்தோறும் வெள்ளியன்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் தலைமையில் நடத்தபடும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது கரோனா பரவல் அச்சுறுத்திவருவதால் அந்தந்த காவல் மாவட்டத் துணை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூடுதல் ஆணையரிடம் காவலர்கள் குறைகளைத் தெரிவிக்கும்படி வசதியை ஏற்பாடு செய்துள்ளதாக போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுமட்டுமில்லாமல், அந்தந்த காவல் மாவட்டத்திற்கான குறைதீர்க்கும் நேரத்தையும் கூடுதல் ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி போக்குவரத்து காவல் துறை தெற்கு மாவட்டம் பகல் 12.30 மணி முதல் 12.45 மணி வரை, மேற்கு 12.45 மணி முதல் 1 மணி வரை, கிழக்கு 1 மணி முதல் 1.15 மணி வரை, வடக்கு 1.15 மணி முதல் 1.30 மணி வரை காவலர்கள் குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை அனைத்துப் போக்குவரத்து துணை ஆணையர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.