சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, பி.டெக் தொழில்நுட்ப பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tanuvas.ac.in என்ற இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் 31 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பாராமரிப்பு பட்டப்படிப்பில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 இடங்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றில் தலா 100 இடங்களும், சேலம் தலைவாசல் கூட்டு ரோடு, தேனி வீரபாண்டி, உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் தலா 80 இடங்களும் என 660 இடங்கள் உள்ளது.
இதை தவிர, உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பில் (பி.டெக்) கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் 40 இடங்களும், ஓசூர் மத்திகிரி கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) 40 இடங்களும், கோடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் பால்வள தொழில்நுட்ப பட்டப் படிப்பில் 20 இடங்களும் நிரப்பட உள்ளது.
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தின் மூலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ஜூன் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரையில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் சேர்வதற்கு 18 ஆயிரத்து 752 மாணவர்களும், பி.டெக் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கு 3 ஆயிரத்து 783 மாணவர்கள் என 22,535 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 26) காலை 10 மணிக்கு https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த ராகும் காந்த், நந்தினி, வசந்தி, சக்தி குமரன், தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த கனிமொழி, விஷ்வா, தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த முத்துலட்சுமி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சார்ந்த கிரேஸ் கிரிஷ்டி, நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த லோபாஷினி, கரூர் மாவட்டத்தைச் சார்ந்த கவுசிகா ஆகிய 10 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இளநிலை தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கான (B.Tech) தரவரிசைப் பட்டியலில் அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த விஷ்ணு பிரகாஷ் முதலிடத்தை பெற்றுள்ளார். அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டு பிரிவின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சார்ந்த விக்னேஷ், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று தரவரிசைப் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளனர்.
மேலும், இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு, இளநிலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!