கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருக்கின்றனர் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்திருந்தார். இதற்கு இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து இலங்கை ராணுவத்தின் ஊடக பேச்சாளர் ரவி ஹேரத் பல சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு தொலைபேசி மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், "தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது.
சொல்லப்போனால், அவர் கொல்லப்பட்டபோது டிஎன்ஏ ஆதாரங்களையும் எடுத்துள்ளோம். அது எங்களிடம் உள்ளது. குறிப்பாக, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி அவர் கொல்லப்பட்டார். இப்போது பொய்யான தகவல்கள் பரவிவருகிறது. இந்த தகவல் எங்களிடையே எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பழ. நெடுமாறன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "சர்வதேசச் குழலும் இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவரை வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலக தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார் தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க: "பிரபாகரன் உயிருடன் உள்ளார்; விரைவில் காட்சி தருவார்" - பழ.நெடுமாறன்