சென்னை: சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், வன்னியர் சமூக உரிமைக்கான போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேருக்கு நான்கு கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், “ நீண்ட நாள் கோரிக்கையாகவும், போராட்டமாகவும் இரண்டு விஷயங்கள் இருந்தன. அந்த இரண்டிலும் தமிழ்நாடு அரசு இன்று வெற்றியை தந்துள்ளது.
இரண்டு விஷயங்கள்
இட ஒதுக்கீட்டிற்காக போராடியவர்கள் குடும்பத்தினருக்கு கல்வி தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே போன்று சுங்க சாவடிகள் அமைப்பதை எதிர்த்து தொடர்ந்து போராடிய நிலையில், மாநகர எல்லைக்குள் உள்ள 5 சுங்க சாவடிகளில் கட்டண வசூல் நிறுத்தப்பட்டுள்ளதோடு விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
48 சுங்க சாவடிகளில் கட்டணம் குறைப்பு மற்றும் அகற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக தெரிவத்துள்ளதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மனைவி மறைவு - டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி