சென்னை: சென்னையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 14 வயது சிறுமி காணாமல் போனதாக, அவரது தாயார் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், தாயாரின் செல்போனை சிறுமி எடுத்துச் சென்றதை அறிந்துள்ளனர்.
இதனால் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியதைத் தொடர்ந்து, சிறுமி மறுநாளே வீடு திரும்பி உள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ‘கிளப்ஹவுஸ்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்த சிறுமிக்கு, அதன் மூலமாக நண்பர்கள் பலர் கிடைத்துள்ளனர்.
தொடர்ந்து அந்த செயலியில் இருந்து கிடைத்த நட்புகள் மூலம் ‘ஸ்வீட்மீட்’ என்ற செயலியை தரவிறக்கம் செய்து சிறுமி பேசி வந்துள்ளார். இந்த ஸ்வீட்மீட் செயலியில்தான் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரிடம் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தாயார் திட்டியதால், வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, அந்த இளைஞர் உடன் செல்ல முடிவெடுத்துள்ளார். இதன் பேரில் சிறுமியை தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்த இளைஞர், தனது தாயை சிறுமியுடன் அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆனால் அதற்குள்ளாகவே சிறுமியை காவல் துறையினர் தொடர்பு கொண்டதால், இளைஞரின் தாய் பயத்தில் சிறுமியை கூட்டிச் செல்லாமல் விட்டுவிட்டுச் சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இளைஞர் பயன்படுத்திய செல்போனை சோதனை செய்தபோது, அந்த எண் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது.
பின்னர் நடத்திய தொடர் விசாரணையில், அந்த செல்போன் எண் வேலூர் மாவட்டத்தில் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து செல்போன் டவர் மூலமாக இருப்பிடத்தை கண்டுபிடித்து, அந்த இடத்தில் காவல் துறையினர் தேடி கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் ‘யாரை தேடுகிறீர்கள்’ என தனிப்படை காவல் துறையினரிடம் கேட்டுள்ளார்.
அப்போது வேறு ஒரு நபரின் பெயரை காவல் துறையினர் மாற்றி கூறியுள்ளனர். பின்னர் அடுத்த நிமிடமே உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டபோது, இளைஞர் தன்னுடைய பெயரை கூறியுள்ளார். இந்த பெயர், சிறுமியிடம் பழகி வந்த நபரின் பெயர் என உணர்ந்த காவல் துறையினர், உடனடியாக அந்த செல்போன் எண்ணுக்கு அழைத்துள்ளனர்.
அப்போது அதனுடைய அழைப்பு சத்தம் அவருடைய பாக்கெட்டில் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞரை உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ஜேசிபி டிரைவராக பணியாற்றி வருவதும், அவர் மீது ஆவடி காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சிறுமியிடம் ஆபாசமாக உரையாடியதால் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சுமார் 8 மாதங்களுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில், தொடர் விசாரணை செய்து குற்றவாளியை கைது செய்த தனிப்படை காவல் துறையினருக்கு காவல் துறை உயர் அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. மந்திரவாதி போக்சோ வழக்கில் கைது!