சென்னை: அம்பத்தூர் அண்ணா சாலை பகுதியில் ஜெயராணி மளிகை கடை நடத்தி வருபவர், செந்தில்குமார் (44). திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையை பூர்வீமாகக் கொண்ட இவர் கடந்த 4 வருடமாக அம்பத்தூரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஜன. 4ஆம் தேதி இரவு 10 மணி அளவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று விட்டு டாட்டா ஏசி வாகனம் மூலம் அம்பத்தூர் திரும்பியுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அதிக சத்தமாக ஒலி எழுப்பி வாகனத்திற்கு, வழிவிடுமாறு தொந்தரவு செய்துள்ளனர்.
பின்னர் செந்தில் குமார் தனது மளிகை கடை முன் வாகனத்தை நிறுத்திவிட்டு, வெளியே வந்த பொழுது வந்த மர்ம நபர் ஒருவர், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் பேசி அடித்து அவமானப்படுத்தி உள்ளார். மேலும் பிழைப்பு நடத்த வந்த இடத்தில் வழிவிட மாட்டாயா? என சண்டைபோட்டு, அங்கிருந்து சென்ற அந்த நபர், ‘உன்னை காலி செய்து விடுவேன்’ என்று கூறி மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜன. 8ஆம் தேதி மாலை சுமார் 7:30 மணியளவில் செந்தில் குமார் கடையில் இருந்த பொழுது அவரை மிரட்டியதாக கூறும் மர்ம நபர் நான்கு பேருடன் வந்து மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் பேசி கூர்மையான ஆயுதம் கொண்டு பலமாக தாக்கியுள்ளார். இதில் செந்தில்குமாரின் முகம், கன்னம் மற்றும் கை தோள்பட்டை ஆகியப் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
பின் தாக்குதல் நடத்திய நபர் மிகவும் தகாத வார்த்தைகளால் செந்தில் குமாரை பேசி, ஒழித்துக்கட்டி விடுவேன் என மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நான்கு பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்; ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் நேரில் வந்து காவல் ஆய்வாளரை சந்திக்க காவல் நிலையம் வந்தார். அப்பொழுது அவர் இல்லாததால் புகாரளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், “அம்பத்தூர் வியாபாரி செந்தில் குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் மாபெரும் கண்டன போராட்டம் நடத்தப்படும்’’ என எச்சரித்துள்ளார். மேலும், '' மத்திய, மாநில அரசுகள் தமிழக வியாபாரிகளிடமிருந்து வரியை மட்டும் வசூலிப்பதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில்லை. இதே நிலை நீடித்தால் நாடு முழுவதும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” எனத் தெரிவித்தார்.