இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் கூறியதாவது, "திமுக நடத்தும் மக்கள் கிராம சபை பொதுமக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. இந்நிலையில் வருகின்ற 21ஆம் தேதி திமுக சென்னை தெற்கு மாவட்டம் சார்பாக "வேளச்சேரியா வெள்ளச்சேரியா" என்ற வினா வோடு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேளச்சேரியில் நடைபெறும். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களை ஒன்று கூட்டி இந்த போராட்டம் நடைபெறும்.
பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவை கொண்டது வேளச்சேரி ஏரி. இந்த ஏரி கழிவுநீரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்காலத்தில் சேத்துப்பட்டில் உள்ள ஏரியையும் வேளச்சேரி ஏரியையும் புனரமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
2018ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் 25 கோடியில் வேளச்சேரி ஏரி சீரமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால் இன்று வரையிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.
சென்னையில் ஒரு மண்டலத்துக்கு 500 நபர்கள் என 15 மண்டலங்களிலும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் 10 ஆண்டுக்கும் மேலாக பணிபுரிந்துவருகின்றனர். கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அவர்கள் தற்போது பணியிலிருந்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள்" என்றார்.