சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர்கள், அரசு பணியில் மிகப்பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆகியோருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் அரசு வாகனம் என்பதை குறிக்கும் வகையில், கவர்மெண்ட் என்ற ஆங்கில வார்த்தையின் முதல் எழுத்தாக "G" என்ற அடையாளத்துடன் கூடிய வாகனப் பதிவு எண்கள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சென்னை காவல் துறைக்கு அரசு வாகனம் இல்லாத தனியார் வாகனங்களில், போக்குவரத்து சட்டத்திற்கு எதிராக "G" என்ற எழுத்துடன், ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார் வந்தது. இதுகுறித்து கண்காணிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
வாகனங்கள் பரிசோதனை
அதன் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் செல்லும் "G" பதிவு எண் கொண்ட தனியார் வாகனங்களை நிறுத்தி அவர்கள் அரசு பணியில் இருப்பவர்களா, இல்லையா என்பதை உறுதிபடுத்தியும், அபராதம் விதித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியராக இருப்பினும் அவர்களின் சொந்த வாகனங்களில் அரசு வாகனங்களை குறிக்கும் "G" என்ற அடையாளத்தை பயன்படுத்தக்கூடாது என்ற விதியின் அடிப்படையில், இந்த சோதனை நடத்தப்படுவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று காவல் துறையில் இல்லாதவர்களும் "POLICE" என்ற ஆங்கில வார்த்தையை தங்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் முன் பக்கமாக வைத்து வருவதும், இந்த சோதனையின்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
அவ்வாறு காவல் துறையில் இல்லாதவர்கள் இதுபோன்று வைத்திருந்தால், அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக சென்னை காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலங்களில் ஊடகத் துறை, காவல் துறை, அரசாங்க சின்னங்களை பயன்படுத்தி பல்வேறு குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில், சென்னை காவல்துறை சார்பில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் கட்டளை