சென்னை: கலை பண்பாட்டுத் துறை, இயல் இசை நாடக மன்றம், மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தும் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகத்தின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஆக. 13) நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். மேலும், இந்நாடகம் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ள நிலையில், இதற்கான இலச்சினையினை வெளியிட்டு, நாடகத்தை தொடங்கிவைத்து பார்வையிட்டார்.
வீரம் என்ற மூன்றெழுத்தை தன் மூச்சாகக் கொண்ட வீரமங்கை வேலுநாச்சியார், ஆங்கிலேய படையெடுப்பால் கணவரை இழந்ததோடு, நாட்டை மீட்டெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பும் அவருக்கு இருந்தது. மருது சகோதரர்கள் ஆதரவுடனும், ஹைதர் அலி, கோபால் நாயக்கர் ஆகியோரின் உதவியுடனும் சிவகங்கை மக்களை ஒன்று திரட்டி, 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு மாபெரும் வெற்றியடைந்து சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 1789ஆம் ஆண்டு வரை சிவகங்கையை ஆட்சி செய்தார். சிவகங்கை சீமையை ஆண்ட வீரமங்கை வேலுநாச்சியார் 25.12.1896ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் கலைப் பண்பாட்டுத் துறை மூலம் ஓ.வி.எம்.தியேட்டர்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞர்கள் பங்கேற்கும் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் விழா நடைபெற உள்ளது.
இவ்விழா ஈரோடு மாவட்டத்தில் வரும் ஆக.15ஆம் தேதி அன்று சி.என்.சி.கல்லூரியிலும், மதுரை மாவட்டத்தில் ஆக.21ஆம் தேதி அன்று ராஜா முத்தையா மன்றம் அரங்கிலும், திருச்சியில் ஆக.22ஆம் தேதி அன்று கலையரங்கத்திலும், கோயம்புத்தூரில் ஆக. 28ஆம் தேதி அன்று இந்துஸ்தான் கல்லூரி அரங்கத்திலும் நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றததின் தலைவர் வாகை சந்திரசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டுவதை கைவிடுக’ - ஆந்திர முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்