இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் அரசான மத்திய மோடி தலைமையிலான அரசு சென்ற முறையே கல்விக் கொள்கையை புதிதாக மாற்றியமைக்க ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.ஆர்.எஸ்.சுப்பிரமணியம் என்பவர் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து, அறிக்கையைப் பெற்றது. இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு மற்றும் சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கெதிரானப் போக்கு, குலக்கல்வி வேற்று ரூபத்தில் என்பது போன்ற பல கொள்கைகளும், நோக்கங்களும், வணிக மயம், கலாச்சாரப் பறிப்பு, மாநில உரிமைகள் பறிப்புப் போன்றவற்றையும் உள்ளடக்கமாகக் கொண்டதால் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
அந்த அறிக்கையை மேலும் சீராக்குவதாகக் கூறி, ஓய்வு பெற்ற விண்வெளித் துறையில் பணியாற்றிய கஸ்தூரிரங்கனை தலைவராகக் கொண்டு இந்த புதிய தேசியக் கல்விக் கொள்கைத் திட்ட வரைவு (டிராப்ட்) தயாரிக்கப்பட்டு, தேர்தல் அறிவிப்பினால் வெளியிடப்படாமல், தேர்தல் முடிந்த பிறகு அறிவித்தனர். அதன்படி, கல்வியாளர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கவலையோடு கருத்துகளைத் தெரிவித்து, ஜனநாயக அடிப்படையில் - விவாத மேடைக்கு இப்பொழுது வந்துள்ளது.
அந்த வரிசையில் பிரபல திரைப்பட நடிகரும், சமூகத்திற்கு தங்களது அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களுக்கும், ஏழை, எளிய மாணவர்கள் படிப்பிற்கும் உதவிடும் நடிகர் சூர்யா இந்தி திணிப்பு குறித்து அவரது கருத்தை கூறினார். மக்கள் இதனை ஏற்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார். அது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியது. ஜனநாயகத்தில் எந்த குடிமகனுக்கும் கருத்துக் கூறும் உரிமையை அரசும், தனி நபர்களும் தடுக்கவோ, பறிக்கவோ, மிரட்டவோ, அதை வைத்து வேறு வழிகளில் பழிவாங்கவோ உரிமை இல்லை.
தமிழக பா.ஜ.க.வின் தலைவர், மன்னிப்புக் கேட்டு மண்டியிட்ட மமதைக்காரர், மாநில மந்திரி ஒருவர் நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும் என்று பேட்டி கொடுத்து, தங்களது மேதாவிலாசத்தைக் காட்டியிருக்கிறார்கள்! ஜனநாயக நாட்டில் மக்களின் குரல் வளையை நெரிப்பதா? வாக்குரிமை உள்ள எவரும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம், சமுதாயத்தின் முன்னேற்றம் பற்றி கவலைப்படத்தான் செய்வார்கள். துணிவுள்ள, தெளிவுள்ளவர்கள் சொல்வதைக் கண்டு பாராட்ட முடியாவிட்டாலும், மவுனமாகவாவது இருப்பதுதான் அரசுக்கு நல்லது.
தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பை ஆட்சியாளர்கள் இப்படி முந்திரிக்கொட்டைத்தனத்தோடு கேலி செய்வது, தவறாகக் கருத்துக் கூறி, தங்களது ஆணவ அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது, திராவிட மண்ணின் அரசியலுக்கும், பொதுநலத்திற்கும் உகந்தது அல்ல. சொல்லுவது யாராக இருந்தாலும், ஆய்வு செய்யும் பக்குவம் வேண்டும். அதுவே நல்லரசுக்கு அடையாளமாகும்" என்று கூறினார்.