சென்னை: நீட் தேர்வு குறித்து அனைத்துக்கட்சிகளுடன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, "நீட் தேர்வு தொடர வாய்ப்பில்லாத அளவில் பரப்புரையை முன்னெடுப்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நீட் தேர்வு விவகாரத்தில் இதற்கு முன் எழுச்சி பெறாத மாநிலங்கள், தற்போது விழிப்புணர்வு கொண்டு இதற்காக குரல்கொடுக்கின்றன" என்றார்.
கடந்த ஆட்சியில் இதேபோன்று நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து கேள்விக்குப் பதிலளித்த அவர், "கடந்த முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் இதற்கும் வித்தியாசம் உள்ளது.
நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களைப் பாதிக்கிறது என்பதை மருத்துவ நிபுணர்கள், அறிஞர்கள் குழு வாயிலாக அறிக்கைத் தாக்கல் செய்து, அதன் அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜன் குழு அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மசோதாவில், அதன் நோக்கம் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சட்ட ரீதியாக நிராகரிக்க முடியாது. அரசியல் ரீதியாக இதனை எதிர்த்தால், அதனை மக்களைத் திரட்டி அரசியல் ரீதியாக சந்திப்போம்" எனக் கூறினார்.
சமூகநீதி தொடர்பாக தங்களுக்கும் அக்கறை இருப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "இறந்தவர்களுக்கு அனுதாபம் கூட சொல்லவில்லை" என விமர்சித்தார்.
நதியினில் வெள்ளம்; கரையினில் நெருப்பு
நீட் தேர்விலிருந்து விலக்கு கொடுப்பது தொடர்பாக ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டிற்கும் இடையே சிரிப்பு என்ற நிலையில் உள்ளார்" என்று கேலியாகப் பதில் அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய சங்கம் முஸ்லீம் லீக் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்புமனு தாக்கல்