சென்னை: அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், கடலூர் துணை மேயர் பா.தாமரைச்செல்வன், ராணிப்பேட்டை நகராட்சி துணைத் தலைவர், திண்டிவனம் நகராட்சி துணைத் தலைவர் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
தேர்தலில் பல குளறுபடி
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், "மறைமுக தேர்தலில் பல குளறுபடிகள் நடைபெற்றன. அதனை முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம். இந்நிலையில் முதலமைச்சர், கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், திமுக சார்பில் போட்டியிட்டவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிக்கை விட்டார். இது முதலமைச்சரின் தலைமைப் பண்பைக் காட்டுகிறது. அவருக்கு விசிக சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.
விசிக முழுமையாக வெற்றி
கட்சி, சின்னத்திற்கு அப்பாற்பட்டு இந்த தேர்தல் நடைபெற்று உள்ளது. ஒரு சில இடங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அதேபோல் ஒரு உறுப்பினர் மட்டுமே உள்ள இடத்திலும், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வாக்களித்து விசிகவை முழுமையாக வெற்றி பெறச் செய்துள்ளன. கூட்டணி நலன் முக்கியமானது, அது தான் மக்களிடையே வெகுமதிப்பை பெற்றுள்ளது. அந்த வகையில் வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்
மறைமுக தேர்தலில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதலமைச்சர் அறிக்கையே எங்களுக்கு போதுமானதாக இருக்கிறது. வரும்காலங்களில் மறைமுக தேர்தல் இல்லாமல், மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் வகையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு: கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்