சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பரங்கிமலை கிராமத்தில் உள்ள 41,952 சதுர அடி நிலம், தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ள காசிவிஸ்வநாதர் தேவஸ்தானத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் என்ற பெயரில் கட்டடம் கட்டப்பட்டு, நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
இந்த அரசு நிலத்தில் பல ஆண்டுகளாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கூறி, பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் அறிவிப்புகள் வெளியிட்டும், ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறாததால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தினை பல்லாவரம் வட்டாட்சியர் மூலம் மீட்ட அரசு, அங்கிருந்த வன்னியர் சங்க கட்டடத்துக்கு சீல் வைத்தது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை வாங்கியதாகவும், தற்போது அந்த கட்டடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிடக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு, சீல் வைக்கப்பட்ட வன்னியர் சங்க கட்டிடத்தை இடிக்கக் கூடாது எனவும், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் எனவும் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட நிலத்துக்கு கண்டோன்மெண்ட், தமிழக அரசு, காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம் ஆகியன உரிமை கோருவதால், நிலத்தை மீட்பது தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பளித்தனர்.
ஏற்கனவே நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள், உரிய சட்டப்படி நிலத்தை மீட்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது? - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!