சென்னை: வாணியம்பாடியில் மஜக மாநில நிர்வாகி வசீம் அக்ரம் அடையாளம் தெரியாத கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று (செப்.13) குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், " கடந்த ஜூலை 26ஆம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கஞ்சா பறிமுதல்
இதையடுத்து அங்கு சென்று சோதனை செய்ததில் ஒன்பது கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைப்பேசிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக பைசல் உள்பட மூன்று நபர்களை கைது செய்துள்ளனர். கஞ்சா குறித்த தகவலை காவல் துறையினருக்கு மஜக மாநில நிர்வாகி வசீம் அக்ரம்தான் கூறியதாக இம்தியாஸ் கருதியுள்ளார்.
இருவர் கைது
இந்நிலையில், செப். 10ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் வசீம் அக்ரம் மசூதியில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வசீம் அக்ரமை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரைச் சேர்ந்த பிரசாத், மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த டெல்லி குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இரும்புக்கரம் கொண்டு அடக்கும்
மேலும் வாணியம்பாடி பகுதியில் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்களை இந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீட் தேர்வு... உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்க முடியுமா? இபிஎஸ் கேள்வி