“வனம் மற்றும் கல்வி” எனும் கருப்பொருளில் உலக வனநாள் விழா தமிழ்நாடு வனத்துறை சார்பில் மாநில அளவிலான நிகழ்ச்சியாக கிண்டி சிறுவர் பூங்காவில் நடந்தது. இதில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பள்ளி மற்றும் “கேர் எர்த்” அமைப்பு சார்பில் மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா மற்றும் தாவர இனங்களை அடையாளம் கண்டறிதல் போட்டி நடந்தது. இதில் 100-ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன. பங்கேற்ற அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில், வனம் மற்றும் அதன் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து தொழில்நுட்ப ரீதியாக விளக்கப்பட்டது. மேலும் அனைத்து தரப்பினரும் வன உயிரினம் குறித்த செய்தியை அறிந்து கொள்ள ஏதுவாக “அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா – பூங்காப் பள்ளி” எனும் யூடியூப் சேனலும் தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும் பூங்கா தூதுவர்களுக்காக பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்ட 'Animal book of vandalur Zoo' எனும் நூலும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்தோட்டக்கழக தலைவர் உபாத்யாய், தலைமை வன உயிரினக்காப்பாளர் சஞ்சய்குமார் ஸ்ரீவட்சவா, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர் யோகேஷ் சிங், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மற்றும் வனத்துறை மூத்த அலுவலர்கள் பங்கேற்றனர்.