சென்னை: நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை கவிஞர் வைரமுத்து பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைரமுத்து, “ஆன்மீகத்திற்கு மட்டுமே தமிழர்கள் திரளாக திரளுவார்கள் என்ற மரபை தாண்டி, அறிவுக்கும் நூல்களுக்கும் திரளுவார்கள் என்ற புதிய மரபை புத்தகக் கண்காட்சி உருவாக்கியிருக்கிறது.
இங்கே பல தரப்பட்ட மக்களையும், வயதுடையவரையும் பார்க்கிறேன். என் அரங்கத்திற்கு வந்து புத்தகத்தில் கையொப்பமிடுகிறேன் என்ற அறிவிப்பை அறிவித்தவுடன், வெள்ளம்போல் திரண்ட கூட்டத்தில் வியர்வையில் வழிவது மகிழ்ச்சியாக உள்ளது. முதன்முதலில் வியர்வை குளிர்ச்சியாக இருக்கிறது என்பதை புத்தகத் திருவிழா உணர்த்தி இருக்கிறது.
புத்தகத்தினை பெற்றோர்கள் படித்துவிட்டு, உங்களது பிள்ளைகளுக்கு கடத்த வேண்டும். புத்தகத் திருவிழாவின் பெரும் பயன் என கருதுகிறேன். புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எனது எழுத்தைவிட, என் கையெழுத்தை நேசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டிஜிட்டல் என்பது வடிவம் மட்டுமே மாறி இருக்கிறது.
தமிழ் பல்வேறு வகையான ஊடகங்களில் மாறி இருக்கலாமே தவிர, தமிழ் என்ற உள்ளீடு மட்டும் மாறவில்லை. காகிதம் என்பதிலிருந்து டிஜிட்டலுக்கு தமிழ் இடம் பெயர்ந்து இருக்கிறது என்று சொல்லலாமே தவிர, தமிழ் இல்லாமல் போய்விடவில்லை. தமிழ் அச்சுக்களாகவும், டிஜிட்டலாகவும் இரண்டாக பிரிந்திருக்கிறது.
நான் எழுதுவது வயதை தொட்டிருந்த போதிலும், அச்சு மற்றும் டிஜிட்டல் இரண்டு உலகத்திற்குள்ளும் செல்கிறேன். ஆனால் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் டிஜிட்டல் உலகத்திற்குள் மட்டுமே செய்திகளைப் படிக்கிறார்கள், எழுத்துக்களை வாசிக்கிறார்கள். எதில் படித்தாலும், தமிழை படியுங்கள். தமிழை நேசியுங்கள். அதைத்தான் முக்கியமாக கருதுகிறேன்.
தமிழர் திருநாளை தை முதல் நாளில் கொண்டாட வேண்டும் என தமிழ் புலவர்கள் ஒன்று கூடி நிர்ணயித்திருக்கிறார்கள். தைத் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். தமிழ்நாடு என்று சொல்வது எங்கள் வழக்கு. அதில் பெருமையும் பெருமிதமும், குறிப்பாக அதிகாரமும் உள்ளது. தமிழ்நாடு என்று சொல்வதால் எங்களுக்கு அதிகாரம் உள்ளதால், அதையே மிகுதியாக விரும்புவோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு - தமிழகம் என்பதை அரசியலாக்க வேண்டாம்' - வானதி சீனிவாசன்