சென்னை: புத்தாண்டையொட்டி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது,”மதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு பணிகள் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து கட்சியின் கிளை, மாவட்ட தேர்தல்கள் என 3 மாத கால நேரத்தில் நடக்க இருக்கிறது. துரை வைகோ சார்பில் தயாரிக்கப்பட்ட மாமனிதன் வைகோ ஆவணப்படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மத்திய அரசு பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்து பல மதங்களைக் கொண்ட இந்திய நாட்டில் சிக்கல்களை உருவாக்க நினைக்கிறது. இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை கட்டாயமாக்க நினைக்கிறது, திட்டமிட்டு காஷ்மீர் மாநிலத்தின் 370 வது அரசியல் சட்டப் பிரிவை ரத்து செய்தனர்.
தமிழ்நாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் மற்றும் தமிழ் மொழி பேசி ஏமாற்ற நினைக்கிறார். அதேபோல் மாநில அரசை மீறி போட்டியாகத் துணை வேந்தர்கள் உடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். ஆளுநர் பதவியையே அகற்ற வேண்டும் என்றார்.
மேலும், தமிழகத்தை முதன்மையான மாநிலமாக அறிவித்து இருக்கின்றனர். பல தொழில் முதலீடு தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறது. மின்சார கட்டணம் உயர்வுக்கு விமர்சனம் இருக்கிறது. ஆனால் புதிய மின் திட்டம் கொண்டு வர, கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் அழுத்தம் ஒருபுறம் இருக்கிறது.
பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தற்போது எதிர்க்கட்சிகள் இதைப் பேச ஆரம்பித்துவிட்டனர், ராகுல் நடை பயணம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பாஜக தமிழ்நாட்டில் வளர்ந்து இருப்பதாக மாய தோற்றத்தை உருவாகியுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் பெரும் பணத்தை பாஜக செலவு செய்து இருக்கிறது" என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:புத்தாண்டு: கோவா சென்று திரும்புகையில் நடந்த கார் விபத்தில் 4 தமிழர்கள் பலி!