சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக மத்திய அரசு ஜனநாயக விரோதமாகச் செயல்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசைத் தூக்கி ஏறிய மக்கள் தயாராகி விட்டார்கள். ஒட்டுமொத்த அதிகாரத்தையும் டெல்லியில் மத்தியரசு குவித்து வருகின்றனர். கொடுத்த வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டு காஷ்மீர் பிரச்சினையில் மாநில அரசின் உரிமைகளைப் பறித்து வருகின்றனர். மாநிலத்தின் கலாச்சாரம் பண்பாடுகளை பாஜக அழித்து வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா கூட்டணி நெருடல் இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழக அரசைப் பின்பற்ற மற்ற மாநிலங்களும் நினைக்கின்றனர். இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாகத் தமிழகத்தை அறிவிக்க வேண்டும். ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசு ஒரு வஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டது போன்ற மாய தோற்றத்தை ஊடகங்கள் தான் ஏற்படுத்தி வருகிறது. சமுக வலைத்தளங்கள் தான் அரசியல் கட்சிகளுக்கு பலமும் பலவீனமும். இந்தியா கூட்டணியில் யாருக்கும் எந்தவித கருத்து மோதல்களும் இல்லை. பொதுவாகவே பல கட்சிகள் கூட்டணியில் சேரும் போது சில கருத்து மோதல்கள் வரும் அதனைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என அவர் கூறினார்.
பொங்கலுக்குப் பிறகு இந்தியா கூட்டணியின் பேச்சுவார்த்தை நடைபெறும் அது குறித்து ஏற்கனவே தெரவிக்கபட்டுள்ளது. பெரிய ஜனநாயக நாடுகளில் வாக்குச்சீட்டு முறை இருக்கிறது. ஈ.வி.எம்.இயந்திரம் தயாரிக்கும் ஜப்பானில் கூட வாக்குச்சீட்டு முறைதான் இருக்கிறது.
ஈ.வி.எம் இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று நிபுணர்கள் எல்லாம் சொல்கிறார்கள் ஆனால் இங்கு நிலைமை அப்படியல்ல இயந்திரத்தை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டமைப்பை உருவாக்கிவிட்டனர்" என்றார்.
மேலும், "தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சுமத்தப்பட்ட சைலேஷ் குமார் ஐஜிக்கு பதவி உயர்வு வழங்குவதைத் தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: விபத்தை தடுக்க 7ஆம் வகுப்பு மாணவர்கள் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி!