சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று (ஆக.7) அனுசரிக்கப்படுகிறது. இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " பெரியார், அண்ணா வழித் தோன்றலாக இருந்தவர் கருணாநிதி. நூற்றாண்டு திராவிட இயக்கத்தில் 50 ஆண்டு காலம் அதனை தலைமை ஏற்று நடத்தியவர். அவர் மறையவில்லை, அவருடைய படைப்புகள், இலக்கியங்கள், சாதனைகளில் வாழ்கிறார்.
ஓய்வறியா சூரியன்
பேரறிஞர் அண்ணா பக்கத்தில் தான் உறங்க வேண்டும் எனக் கருணாநிதி கூறியதை அவர் நினைவு கூர்ந்தார். அவரின் விருப்பப்படியே ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். ஓய்வறியா சூரியன் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.
கலைஞர் வழி
இந்தியா என்ற உப கண்டத்தில் சனாதான சக்திகள், இந்துத்துவா சக்திகள் திராவிட இயக்கத்தின் எதிரிகள் மட்டுமல்ல அவர்கள், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற அக்கிரமத்தை திணிப்பதற்கு முன்பே அதை எதிர்த்து தகர்ப்பதற்கு நமக்கு வழிகாட்டுவதற்கு கலைஞர் இருக்கிறார். அவருடைய வழியில் செல்வோம், காலத்தால் அழியாத புகழ் கொண்டிருக்கிறார் கலைஞர் என வைகோ பேசினார்.
இதையும் படிங்க: கருணாநிதி நினைவுநாள்: தலமரக்கன்று நடும் திட்டம் தொடங்கிவைப்பு