மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில், அவர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, இனப்படுகொலைக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் எவரும் தப்பிக்க முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தார். காங்கோ அதிபர் மீது தொடரப்பட்ட இனப்படுகொலைக்கு எதிரான வழக்கில் தற்போது தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய வைகோ, இதே நிலைமைதான் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவிற்கும் நடக்கும் என்றார்.
மேலும் மத்திய அரசு சிறுபான்மை மக்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பசுக்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என கூறிவருவதாக புகார் தெரிவித்தார்.
மேலும், அவர் பேசுகையில், அஞ்சல் துறையில் தமிழர்கள் இருக்கக் கூடாது என கருதி மத்திய அரசு தமிழில் தேர்வு எழுதக் கூடாது என்று அறிவித்துள்ளதை குறிப்பிட்டார்.
இந்தியாவைப் பிரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயல்பட்டுவருவதாக குற்றம்சாட்டிய வைகோ, இதைக் கூறும் தன் மீது வழக்கு தொடரப்பட்டால் அதையும் எதிர்கொள்ளத் தாம் தயார் எனத் தெரிவித்தார்.