சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று (ஏப்.30) சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.
ரெம்டெசிவிர் மருந்தை தேவையில்லாமல் அனைவருக்கும் பரிந்துரைக்கக்கூடாது. அப்படி பரிந்துரை செய்யும் மருத்துவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவண்ணாமலை, சேலம் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை தாம்பரத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய இருந்த 17 ரெம்டெசிவிர் மருந்துகள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 18 முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி, உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து எப்போது வரும் என தெரியாது.
அரசின் சார்பில் 1 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும், அவை எப்போது வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மத்திய அரசு தடுப்பூசிகள் எப்போது வரும் என்பது குறித்து எந்தவிதமான தகவலையும் அளிக்கவில்லை. சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்றுப் பரவலை தடுப்பது சவாலாக உள்ளது. போதியப் படுக்கை வசதிகள் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 10 நாள்கள் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பதற்றம் அடைய வேண்டாம்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சில நாள்களாக கரோனா குறைவு - ராதாகிருஷ்ணன் தகவல்