சென்னை: கரோனா தொற்றுப் பரவலை குறைப்பதற்காக சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதில் முக்கியமாக ஒன்று தடுப்பூசி செலுத்துவது.
சென்னையில் மொத்தம் 45 கரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில், மக்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 26ஆம் தேதி வரை 25,05,796 நபர்களுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
இணையதளத்தில் பதிவு
சென்னை மாநகராட்சி, சென்ற வாரம் தடுப்பூசி செலுத்துவதற்குப் பதிவு செய்வதற்காக பிரத்யேகமாக ஒரு இணைய தளத்தை உருவாக்கியது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்தால், தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம், நாள் அதில் தெரிவிக்கப்படும். அந்த நாட்களில் அவர்கள் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
மேலும் இன்று (ஜூன் 28) இந்த இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
தடுப்பூசித் தட்டுப்பாடு
இது தொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் விசாரித்தபோது, 'சென்னையில் கரோனோ தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகவே இன்று (ஜூன் 28) தடுப்பூசி முகாம்கள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் மீண்டும் எப்பொழுது தடுப்பூசி வருகிறது எனத் தெரிந்த பிறகே தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இன்று இணையதளத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி உள்ளது' எனத் தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து இணையதளத்தில் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: 'களைகட்டிய காஞ்சி' - கோயில்கள் திறப்பு.. பக்தர்கள் மகிழ்ச்சி..