சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் உணவு விடுதி நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் இவர், உடம்பில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த பொதுமக்களும், காவல்துறையினரும் அவரை தடுத்து உடம்பில் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர். இதனை தொடர்ந்து தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 2017 ஆம் ஆண்டு கந்துவட்டி தொழில் நடத்தி வரும் கண்ணன் என்பவரிடம் உணவகத்தின் மேம்பாட்டிற்காக 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து 4.5 லட்சம் ரூபாய் வரை திருப்பி செலுத்தி உள்ளேன். கடனை முழுவதும் செலுத்திய பிறகும் கண்ணன் தனது உணவகத்தை அபகரித்து 1.5 கோடி மதிப்பிலான பொருட்களை எடுத்துச் சென்று விட்டார்.
இது குறித்து நூங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நுங்கம்பாக்கம் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, கண்ணனுக்கு உடந்தையாக செயல்பட்டு என்னை மிரட்டி வருகிறார்.
எனவே கடையை அபகரித்த கண்ணன் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு நீதியும் கிடைக்காததாலேயே தற்கொலைக்கு முயன்றேன் என்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.