சென்னை: சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகர் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சென்னை விமான நிலையம் சுங்க அலுவலர்கள் சோதனை நடத்தினா்.
அப்போது இலங்கையைச்சேர்ந்த 25 வயது, 28 வயது, 2 பெண் பயணிகள் சுற்றுலாப் பயணிகளாக வந்துவிட்டு,மீண்டும் இலங்கைக்கு இந்த விமானத்தில் செல்ல வந்திருந்தனா். அவர்கள் இருவரும் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டனர். இதனால் சுங்க அலுவலர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி உடைமைகளை சோதனையிட்டனர். ஆனால், அவர்கள் உடைமைகளில் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இதை அடுத்து பெண் சுங்க அதிகாரிகள், 2 பெண் பயணிகளையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனா். அவர்களின் உள்ளாடைகளுக்குள், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். அவைகளின் மொத்த மதிப்பு ரூ.20.89 லட்சம். இதை அடுத்து சுங்க அலுவலர்கள் 2 இலங்கை பெண் பயணிகளைக் கைது செய்தனர். அவா்கள் இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டுப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். இவர்கள் இந்த வெளிநாட்டுப்பணத்தை, இலங்கையில் யாரிடம் கொடுக்க எடுத்துச்செல்கின்றனர்? சென்னையில் இவர்கள் இடம் இந்தப்பணத்தை கொடுத்து அனுப்பியது யார்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:'செஸ்-க்காக வந்தேன்... சேலை வாங்கிச் செல்கிறேன்': கென்யா பயிற்சியாளர்