சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் ஆக்கிரமிப்பு தொடர்பாக டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், நடைபாதைகளை முறையாகப் பராமரிக்கக் கோரி வந்தனா சக்காரியா என்பவர் தொடர்ந்த வழக்கும், நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், நடைபாதை வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி, சென்னையில் 15 மண்டலங்களிலும் உள்ள நடைபாதை வியாபாரிகளின் கணக்கெடுக்கப்பட்டு, ஐந்தாவது மண்டலத்தில், 637 நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திற்கு எதிரில் விரிவாக்கம் செய்யப்பட்ட நடைபாதையில் வாகனங்களை நிறுத்தாமல் தடுப்பதற்காக, 28 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்புகள் ஏற்படுத்த இருப்பதாகவும், இப்பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், மேலும் பிப்ரவரி இறுதியில் இப்பணிகள் முடிவுபெறும் எனவும் தெரிவித்தார்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நடைபாதை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கினாலும், சட்டவிரோதமாக நடைபாதை வியாபாரிகள் சாலையில் விளிம்பில் ஆக்கிரமித்து வாகன போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாகவும், சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து தீர்வுகாண அறிவுறுத்தாவிட்டால் இந்தநிலை தொடரும் எனவும் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னையில் அடையாளம் காணப்பட்டு, கணக்கெடுக்கப்பட்டுள்ள நடைபாதை வியபாரிகளின் விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம்செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை. தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிப்பாணைக்குத் தடை!