அம்பத்தூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, கள்ளிகுப்பம் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுவருகிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு 11 மாடிகளைக் கொண்டதாகும். இங்கு உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சார்ந்த மோகன்குமார் (25), ராம்ஜி நிஷாத் (26) உள்பட ஏராளமானோர் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் மோகன்குமார், ராம்ஜி இருவரும் அங்குள்ள 11ஆவது மாடியில் மது அருந்தி உள்ளனர். பின்னர், போதை அதிகமானதால் ராம்ஜி அங்கேயே தூங்கிவிட்டார்.
அதன்பிறகு, மோகன்குமார் மாடியில் செல்போனில் பேசியபடி அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்த நிலையில் திடீரென தடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில், தரையில் மண்டை உடைந்து மோகன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து காவலாளி நாராயணன் அம்பத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இறந்தவர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் ராஜி தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். 11ஆவது மாடியிலிருந்து கட்டடத் தொழிலாளி விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்பத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு