சென்னை: நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் நல வாரியங்களை கலைத்துவிட்டு ஒரே தொழிலாளர் நல வாரியம் அமைக்கும் திட்டத்தத்துக்கு தொழிலாளர் பாதுகாப்பு இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பேசிய அமைப்புசாரா தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் கீதா, "கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நல வாரியம் மூலமாக முறையாக நிதி வழங்கப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக நல வாரியத்தில் பதிவு செய்தவர்களில் பாதி நபர்களுக்கு புதுப்பிக்கவில்லை என்று கூறி பணப் பலன்கள் மறுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களிலும் பாதி தொழிலாளர்களுக்கு மட்டுமே பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் நல வாரியப் பணப் பலன்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால், செல்போன் இல்லாதவர்கள், செல்போன் இருந்தும் சரியாக பயன்படுத்த தெரியாதவர்களின் வசதிக்காக எளிமையான முறையில் பணத்தை வழங்க நடவடிக்கை வேண்டும்.
கேரளா போன்ற தொழிற்சங்கள் வாயிலாக நல வாரிய பணத்தை வழங்கலாம் அல்லது கர்நாடகா போன்று தொழிலாளியின் ஆதார் எண்னை வைத்து எளிமையான வகையில் பணப் பலன்களை வழங்கலாம்.
பல போராட்டங்களுக்குப் பிறகு கிடைக்கப் பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை 4 தொகுப்பு சட்டங்களாக மாற்றியுள்ளனர். தொகுப்பு என்றால் அதன் உள்ளடக்கம் அனைத்தும் புதிய சட்டங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், பழைய சட்டங்களில் உள்ள தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களை நீக்கிவிட்டனர். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழிலாளர்களுக்கான அம்சங்கள் நீக்கப்பட்டு, பெரு முதலாளிகளுக்கு சாதகமான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் தனித்தனியாக தொழிலாளர்கள் நல வாரியம் தற்போது செயல்பட்டு வரும் சூழலில் இவை அனைத்தையும் கலைத்துவிட்டு நாடு முழுவதும் ஒரே தொழிலாளர் நல வாரியம் அமைக்க முடிவு செய்துள்ளார்கள்.
ஆனால், அதற்கு தனியாக நிதி ஆதாரம் இல்லை. அரசின் தொழிலாளர் நலத்துறையின் கீழ் நல வாரியத்தை செயல்படுத்தாமல் தனியார் வசம் ஒப்படைக்க முயற்சி செய்கிறார்கள். தமிழ்நாடு அரசு நல வாரியத்தை மாற்றியமைப்பதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு எளிமையான வகையில் நல வாரிய பணப் பலன்களை வழங்க வேண்டும், உறுப்பினர்கள் முறையாக புதுப்பிக்க வேண்டும், தொழிலாளர் சட்டத்தில் திருத்த மேற்கொள்ள மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
நகர்புற வேலையின்மையைப் போக்க நகர்புற வேலை உறுதித் திட்டத்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அமைப்பு சாரா தொழிலாளர்களின் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு நாளை முதல் அடுத்த வாரம் வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும்" என்றார்.
இதையும் படிங்க: ஊதியம் வழங்காததால் ஊழியர்கள் போராட்டம்