சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (30). இவர் இன்று (ஜூன் 04) மதியம் புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென்று அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதியை தாக்கிவிட்டு தப்பிச் சென்றது. இதில், பலத்த காயங்களுடன் அவர் சாலையில் கிடந்துள்ளார்.
இது குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர், பார்த்தசாரதியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முன்விரோதம் காரணமாக பார்த்தசாரதி வெட்டப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.