கடந்த ஆண்டு கரோனா காரணமாக, அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு அறிவித்தபோது, முதல் பல்கலைக்கழகமாக சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ்நாடு அரசின் உத்தரவை அமல்படுத்தியது. இதனை எதிர்த்து சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
பல்கலைக் கழக மானியக் குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகிய அமைப்புகளும், தமிழ்நாடு அரசின் முடிவை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தன. இதற்கு முன்னதாக பல்வேறு பல்கலைக்கழகங்கள் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சியை வழங்கிவிட்டன.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஏப்ரல் 7) அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கக்கூடாது எனவும்; அவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கக்கூடாது எனவும்; மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தது. ஆனால், சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், அரியர் மாணவர்களுக்கும் சேர்த்தே பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்தத் தகவலை சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கெளரி உறுதிபடுத்தினார். கடைசி நேரத்தில் அரியர் மாணவர்கள் பட்டங்கள் பெறுவோர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க சென்னை பல்கலைக்கழகம் நடவடிக்கை