சென்னை: இந்தியாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை பணிகள் இன்று நடைபெறுகின்றன . அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகிறது.
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை பணி நடைபெற்று வருகின்றன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசு கரோனோ நோய் தொற்று முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் தற்போது அதிலிருந்து சிறப்பாக மீண்டு வந்துள்ளது. இதற்காக பாடுபட்ட முதலமைச்சர், அமைச்சர்கள், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வாழ்த்துகள்.
அனைத்து மாநிலங்களும் நோய்த் தடுப்புப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகிறது. கரோனா பாதிப்புகள் தற்போது ஆயிரத்திற்கு குறைவாகவும், சில நாள்களில் 800க்கும் குறைவாகவும் இருந்து வருகிறது. 2020ஆம் ஆண்டு முழுவதுமாக பெருந்தொற்று ஆக்கிரமித்த நிலையில் தற்போது நோய் பரவல் , உயிரிழப்புகள் குறைந்துள்ளது.
இந்தியாவில் 1 கோடியே 4 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், இறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது.
ஆரம்பத்தில் கரோனா பிரச்னை எழுந்தபோது ஒரே ஒரு பரிசோதனை மையத்துடன் தடுப்புப் பணிகளைத் தொடங்கினோம். ஆனால் தற்போது, நாடு முழுவதும் தற்போது இரண்டாயிரத்து 300 ஆர்டிபிசிஆர் , நானோ பரிசோதனை மையங்கள் உள்ளன.
இரவு பகலாக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் பல்வேறு சோதனைகளுக்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 'கோவின்' செயலியில் பதிவு செய்த சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த முதல்கட்டமாக திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் முதல்கட்டமாக கரோனோ பரிசோதனை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது .தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 125க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமே 100 விழுக்காடு ஆர்டிபிசிஆர் முறையில் கரோனோ பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. இது பாராட்டத்தக்கது. தற்போது இரண்டு கரோனோ தடுப்பூசிகள் அவசர காலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வருங்காலங்களில் நகரம் முதல் கிராமங்கள்வரை தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கபடும். அதிகப்படியான பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. முதல்கட்டமாக சுகாதாரத் துறை பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், பின்னர் வயது முதிர்ந்தவர்கள், நாள்பட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் என முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்தியா முழுவதும் ஜனவரி 17ஆம் தேதி தேசிய அளவில் போலியோ தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்துவந்து இரண்டு சொட்டு போலியோ சொட்டு மருந்து அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு ஒத்திகை - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு!