இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நீட் தேர்ச்சி விகிதம் உயர்கிறது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திட முயற்சி செய்தவர்களின் கபட எண்ணத்தைத் தகர்த்துள்ளது இன்றைய ஆங்கிலப் பத்திரிகை ஒன்று.
மொத்தம் 720க்கு 113 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என நிர்ணயித்துள்ளது தேசியத் தேர்வு முகமை. ஒருவர் நீட்டில் தேர்ச்சி பெற்றாலே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்ற கருத்து மாணவ, மாணவியர், பெற்றோர் மத்தியில் பரப்பப்பட்டிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. நீட் தேர்ச்சியின் மூலம் ஒரு மாணவர் மருத்துவப் படிப்பிற்கு சேர விண்ணப்பிக்க மட்டுமே தகுதி பெறுவார் என்பதே உண்மை. அதாவது, நீட் தேர்ச்சி என்பது கணிதத்தில் 100க்கு 35 எடுத்து, ஜஸ்ட் பாஸ் ஆவதைப் போல.
இந்த ஆண்டு நீட் கட்-ஆஃப் மதிப்பெண்கள் உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த எட்டு மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பில் அனுமதி கிடைக்கலாம் என்கிறது அந்தப் பத்திரிகை செய்தி.
அரசுப் பள்ளி மாணவர்களில் நீட் தேர்வில் 300 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்கள் 89 பேர்தான். அரசின் பயிற்சி மையங்களில் படித்து, 500க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நால்வர், 495 மற்றும் 497 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் என மொத்தம் எட்டு பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
அதுவும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 89 பேரில், 82 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, குறிப்பாக, அவர்களில் 423 மதிப்பெண் பெற்றவருக்குக் கூட மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்கிறது அந்தக் கட்டுரை.
நீட் தேர்வு முறையை நியாயப்படுத்தும் போலியான நோக்கில் தமிழ்நாடு சாதிக்கிறது எனப் பூரிப்படைந்தோர், புளகாங்கிதம் கொண்டோர், பரப்புரை செய்யலாம் என்ற கற்பனையில் மிதந்தோர், இந்தக் கசப்பான உண்மையை அறிந்து தெளிவார்களா?
இனியேனும் நீட் தேர்வு முறைக்கு வக்காலத்து வாங்குவதை சப்தமில்லாமல் நிறுத்திக் கொள்ளவேண்டும். தமிழ்நாடு மாணவர்களின் குறிப்பாக நகர்ப்புற, கிராமப்புற, ஏழை, எளிய, நடுத்தரப்பிரிவு மாணவ மாணவியரின் மருத்துவக் கனவுகள் நிறைவேற வேண்டுமானால், மத்திய பாஜக அரசு பிடிவாதமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடத்திவரும் நீட் தேர்வானது ரத்து செய்யப்பட வேண்டும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேர்வை நடத்த அருகதையற்றவர்கள், கல்வி தரத்தை நிர்ணயிப்பதா?- கனிமொழி