சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால் வாக்காளர்களுக்கு பணம் வழங்கபடுகிறதா என்பதை கண்காணிக்க வருமானவரித் துறையினர் குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சென்னை பூக்கடையில் நாராயண முதலியார் தெருவில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடையில் வருமானத்திற்கு அதிகமாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக வருமானவரித் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் வருமானவரித் துறை அலுவலர்கள் கடைக்குச் சென்று சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 3 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்தத் தொகை குறித்து வருமானவரித் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அவ்விசாரணையில் அதே பகுதியில் ஏகாம்பரம் தெருவில் அமைந்துள்ள இரண்டு ஸ்டீல் கடைகளில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அங்கு விரைந்த வருமானவரித் துறையினர் இருகடைகளிலும் 2 கோடி ரூபாய் ரொக்கப் பணம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரணை மேற்கொண்டபோது, அவை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஹவாலா பணம் என தெரியவந்ததாக வருமானவரித் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நாராயண முதலியார் தெரு எண் 24இல் வருமானவரித் துறையினர் சோதனை செய்துகொண்டிருந்தபோது, கடையின் உரிமையாளர் மிதுன் (35) திடீரென நெஞ்சுவலி வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க:நடைமுறையில் உள்ள திட்டங்களைக்கூட அறியாமல் தேர்தல் அறிக்கை வெளியிடும் முதலமைச்சர்