சென்னை: சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா சிறப்பு பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அந்த விமானத்தில் சர்வதேச போதைப்பொருளை கடத்தும் கும்பலைச் சேர்ந்த ஒருவர் பெருமளவு போதைப்பொருளைக் கடத்தி வருவதாக சுங்கத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறையினர் அந்த விமானத்தில் வந்த 148 பயணிகளையும் தீவிரமாக கண்காணித்தனர். அத்தோடு சந்தேகத்திற்கிடமான பயணிகளை நிறுத்தி அவா்களையும், அவர்களது உடைமைகளையும் சோதனையிட்டனர்.
தப்பிக்க உகாண்டா பயணியின் புது யுக்தி
இந்நிலையில் உகாண்டா நாட்டைச் சேர்ந்த 29 வயது பெண் பயணி ஒருவர் மீது சந்தேகம் வந்தது. ஆனால், அந்தப் பெண் பயணி தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார்.
திருடன் அல்ல திருடி
ஆனால், அந்தப் பயணி நடந்து செல்லும்போது, அவரது நடை சற்று வித்தியாசமாக இருந்தது. இதையடுத்து சுங்கத்துறையினர், அந்தப் பெண் பயணியை மீண்டும் உள்ளே அழைத்து வந்தனர்.
அத்தோடு அவரை பெண் சுங்க அலுவலர்கள் தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். அந்தப் பயணியின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த ஒரு பார்சலை கைப்பற்றினர்.
அந்தப் பார்சலுக்குள் 108 கேப்சூல் மாத்திரைகள் இருந்தன. அதை உடைத்து பார்த்தபோது, உள்ளே ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 108 கேப்சூல்களில் 1.07 கிலோ (ஒரு கிலோ 70 கிராம்) ஹெராயின் போதைப்பொருள் இருந்ததைப் பறிமுதல் செய்தனர். அதன் சா்வதேச மதிப்பு ரூ.7 கோடி.
இதையடுத்து சா்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்த உகாண்டா நாட்டுப் பெண் பயணியான ஜுடித் டூவினோம் வெபிமெப்ஸி (29) என்பவரை அலுவலர்கள் கைது செய்தனர். இந்த போதைப்பொருளை சென்னையில் யாரிடம் கொடுக்க கொண்டு வந்தார் என்று சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையில் கருணை அடிப்படையில் வேலை