திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்பவர் தன்னுடன் கல்லூரியில் படித்த பட்டியலினத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரை 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். அதனால் அவர்களுக்கு கவுசல்யாவின் தந்தையிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாகக் கூறப்படுகிறது.
அதையடுத்து 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் தம்பதிகள் இருவரும் மூன்று பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டனர். அதில் கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர்தப்பிக்க, சங்கர் உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து கூலிப்படை வைத்து சங்கர் கொலை செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டு, அதில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனையும் விதித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்தவழக்கின் தீர்ப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின் அந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கடலூர் மாணவன் கொலை வழக்கில் மேலும் ஐவர் கைது