திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கௌசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த சங்கர் என்பவரை 2015ஆம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கௌசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைபேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் கௌசல்யா உயிர் தப்பினார்.
இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட நீதிமன்றம், கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனையும், மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. வழக்கில் தொடர்புடைய மற்ற மூவரை விடுதலை செய்தது. இதையடுத்து மரண தண்டனையை உறுதிசெய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல் தண்டனையை எதிர்த்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பிலும், விடுதலையை எதிர்த்து காவல் துறை தரப்பிலும் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை நீதிபதிகள் சத்திய நாராயணன், நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஜூன் 22ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே நாாளில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா சோதனை