சென்னை: புதிய கல்வி கொள்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரவாயலில் உள்ள அவரது வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். கரோனா காலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ஸ்டாலின் முன்னிலையில் சீமான் ஆஜரானார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், “புதிய கல்விக் கொள்கையை இந்த அரசு ஏற்கிறதா, எதிர்க்கிறதா என்று முதலில் தெரியப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் என் மீது வழக்கு போடப்பட்டது. திமுக ஆட்சி அமைந்த பிறகு டிஜிபி சைலேந்திரபாபு குறைந்த காலத்தில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்வதாக அறிவித்தார்.
எங்களை மட்டும் இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் நேரில் வரவேண்டும் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்..?, உதயநிதி ஸ்டாலின் மீதும் கரோனா காலத்தில் அதிக வழக்குகள் போடப்பட்டன. தற்போது அவர் மீது போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்வதற்காக இதனைக்கொண்டு வந்தார்களா என்று தெரியவில்லை.
உதயநிதி ஸ்டாலின் நிச்சயமாக அமைச்சராக ஆவார். ஐந்தாண்டுகள் அமைச்சராகமாட்டேன் என எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள். அதன் பிறகு நான் பேசுகிறேன். புதிய கல்விக்கொள்கை இந்தி, சமஸ்கிருதத்தை தான் ஊக்குவிக்கிறது.
வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதால் முதலில் நம்மை உழைப்பில் இருந்து வெளியேற்றுவார்கள். பின்னர் மண்ணில் இருந்து வெளியேற்றுவார்கள். இது நடக்கும்” எனத் தெரிவித்தார்.