சென்னை: எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் மாணவர் அணியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று (டிச.17) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தலைமை வகித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, “ஆளுநர் பதவி தேவையில்லை. அது ஓழிக்கப்பட வேண்டும். பாஜக ஆட்சி இல்லாத மாநிலத்தில் ஆளுநர் மூலம் மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டின் நலனுக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றக் கூடிய சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார்.
ஆன்லைன் அவசர சட்ட மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்துவதன் காரணமாக, தமிழ்நாட்டில் வாரம் இரண்டு பேர் உயிரிழந்து வருகின்றனர். பிற மாநிலங்களிலும் உயிரிழந்து வருகின்றனர். ஐஐடி பணியிடங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வேண்டும்.
ஆவினில் ஒரு லிட்டர் நெய் விலை 50 ரூபாய் உயர்வு என்பது தவிர்க்க முடியாதது. பாஜக ஆளுகின்ற கர்நாடக மாநிலத்தை ஒப்பிடும்போது, இதன் விலை தற்போது சரிசமமாகவே இருக்கிறது. திமுகவுடன் வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும். மதச்சார்பற்ற கூட்டணியில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளும் இணைய வேண்டும்.
உதயநிதி ஸ்டாலின் மக்களால் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது வரவேற்கக்கூடியது. வாரிசு அரசியல் என்பதைதான் ஏற்கவில்லை. மக்கள் விருப்பப்பட்டால்தான் ஒருவர் அரசியலில் வளர முடியும்" என கூறினார்.
இதையும் படிங்க: திமுக வெற்றிக்காக பாடுபட்டவர் உதயநிதி.. திமுக பொருளாளர் டிஆர் பாலு..