சென்னை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதற்கான பரிந்துரை கடிதம் இன்று ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தது முதலே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் எனத் தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வந்துவிடும் காரணத்தினால் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய இலாகாவுடன் அமைச்சர் பதவி வழங்க அவர் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இரண்டாவது தளத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு சக அமைச்சர்களின் வரிசையில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 14ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார் என ஆளுநர் மாளிகையும் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஆனால், அவருக்கு ஒதுக்கப்படும் துறை குறித்து எந்தவொரு தகவலையும் ஆளுநர் மாளிகை பகிரவில்லை.
மேலும் சீனியர் அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி
கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ .பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகவும்;
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த கே.ஆர். பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும்,
வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் சுற்றுலாத்துறை அமைச்சராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் வனத்துறை அமைச்சராகவும் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளனர் எனத்தெரிகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை காலை அல்லது நாளை பிற்பகல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது