சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், அரசு வேலை வாய்ப்பு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி திட்டத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக அரசு நடத்தும் இந்த இலவச பயிற்சி திட்டம் அரசு வேலை வாய்ப்புகளைப் பெற இளைஞர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நீட் தேர்விற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதாகவும், அதனை ரத்து செய்யத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கூடாது என்று வலியுறுத்தும் தமிழக அரசு, அரசு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு சேர்க்கைக்குக் கடந்த சனிக்கிழமை நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது முரண்பாடாக அமைந்திருக்கிறதே? இதற்குக் கல்வியாளர்கள், ஆசிரியர் சங்க அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இதுபோன்று நடந்திருக்கிறதா? என அமைச்சர் பொன்முடி மற்றும் முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோரிடம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின், இந்த தேர்வு ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குரூப் 2 தேர்வு குளறுபடி விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். முதல்வர் பிறந்தநாளில் பல்வேறு தேசிய தலைவர்கள் கலந்து கொண்டதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, பாரதிய ஜனதா கட்சி வேண்டும் என்றே பொய்யான தகவல்களைத் தமிழகத்தில் பரப்பியது எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் 15 மாதிரி பள்ளிகள் துவங்கப்படும் என அரசு அறிவித்தது. அந்த மாதிரி பள்ளிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உண்டு உறைவிட வசதியுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 15 மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது.
அதன்படி மார்ச் 4-ஆம் தேதி அரசு பள்ளிகளில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் சேர்ந்திட அடிப்படை தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன் அறிவித்திருந்தார்.
இந்த தேர்வு சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை OMR தாள்களை கொண்டு தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 240 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். 120 மாணவர்களும் 120 மாணவிகளும் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'திராவிட மாடல்' எந்த அமைச்சருக்காவது அர்த்தம் தெரியுமா? - வைகைச்செல்வன் சவால்!