திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆன்லைன் வகுப்புகளை நெறிமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். அதே போல் சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ம. சுப்பிரமணியன் பங்கேற்றார்.
இதன் ஒரு பகுதியாக, தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமிடம் இதை பற்றி தெரிவிக்கும் போது, சட்டப்பேரவையில் நீட் தேர்வை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்புங்கள் விலக்கு தருகிறோம் என்று தெரிவித்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் நீட் தேர்வை ஏற்கவில்லை. ஆனால், தற்போது இபிஸ், ஓபிஸ் ஆட்சியில் நீட் தேர்வு திணிக்கப்படுகிறது. இதனால் உயிர்பலி ஏற்படுகிறது. இதே போல் ஆன்லைன் வகுப்பினால் தற்போது தற்கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கும் சரியான தீர்வு தேவை. ஆன்லைன் வகுப்புகளை தொலைக்காட்சி மூலமாக நடத்தலாம்.
ஆன்லைன் வகுப்புக்குத் தேவையான கைபேசிகள் பெரும்பாலான மாணவர்களிடம் இல்லை. அது இருந்ததாலும் நெட்வொர்க் பிரச்னைகள் இருக்கின்றன. அனைத்தையும் அரசு முறைப்படுத்த வேண்டும்.
டி-சர்ட் அணிவதன் மூலம் தமிழ் வளராது என்று பாஜக நிர்வாகி வானதி ஸ்ரீனிவாசன் கூறிய கருத்துக்கு பதிலளித்த அவர், "பாஜக கரோனா தொற்றை ஒழிக்கிறோம் எனக்கூறி கைகள் தட்டுவது, விளக்கு ஏற்றுவது போன்ற செயல்களை விட டி-சர்ட் அணிவது ஒன்றும் கேவலமாக இல்லை. மேலும், தமிழ் வளர்க்க நங்கள் டி-சர்ட் போடவில்லை. இந்தி திணிப்பை கண்டித்து டி-சர்ட் அணித்தோம்.
கரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடி இருக்கும் நிலையில் தனியார் பள்ளிகளில் கட்டணம் உயர்வாக வாங்குவது சரி இல்லை. இதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு சரி செய்யவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'மத்திய அரசின் இந்தித் திணிப்பால் கொதித்தெழும் தமிழ்நாடு' - வைகோ எச்சரிக்கை