அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான ஊபர், ஆட்டோ ரென்டல் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நேரத்திற்கு ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தலாம்.
இதில், ஒரு மணி நேரத்துக்கு அல்லது 10 கிலோமீட்டர் தூரத்துக்கு 159 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாளில் அதிகபட்சமாக 8 மணி நேரம் வரை இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சேவையை 24 மணி நேரமும் பயன்படுத்த முடியும். பயனாளர்கள் தங்களுக்குத் தேவையான இடங்களில் எல்லாம் ஆட்டோக்களை நிறுத்திவிட்டு, தங்களது பணிகளை முடித்துக்கொண்டு பின் மீண்டும் பயணத்தை தொடரலாம்.
மும்பை, டெல்லி, புனே, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் இந்தச் சேவை அமலில் இருந்துவரும் நிலையில், தற்போது சென்னையிலும் ஆட்டோ ரென்டல் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊபர் இந்தியா நிறுவனத்தின் சந்தைப்பிரிவுத் தலைவர் நிதிஷ் பூஷன் கூறுகையில், "கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றுக்குப் பின் பொதுப்போக்குவரத்து இல்லாத சூழலிலும், கூட்டத்தைத் தவிர்க்கும் நோக்கில் பொதுமக்கள் தனி வாகனங்களைப் பயன்படுத்திவருகின்றனர்.
ஆனால் தனிப்பட்ட வாகனங்கள் இல்லாதவர்கள் வெளியே சென்றுவர முடியாத சூழலைக் கருத்தில்கொண்டு, மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்விதமாக இந்தச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: இந்தியர்களுக்கு பண்டிகை காலத்தில் அதிரடி சலுகையை வழங்கும் ஆப்பிள்