தூத்துக்குடி மாவட்டம் வடலிவலை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள் (60), அவரது மகள் மீனா, 7 வயது சிறுவன் ஆகியோர் நேற்று (டிசம்பர் 15) மாலை 6.15 மணியளவில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்துள்ளனர்.
முதலமைச்சரைச் சந்தித்து மனு கொடுக்க வேண்டும் எனக் காவலாளியிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால் மனமுடைந்த கிருஷ்ணம்மாள், மீனா ஆகியோர், முதலமைச்சர் வீட்டருகே விஷம் அருந்தியும், கயிறு மூலம் கழுத்தை நெரித்துக் கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைப் பார்த்த காவலாளி, அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் காவல் துறையினர், விசாரணை நடத்தினர். அதில், கிருஷ்ணம்மாளின் மகள் ஜமுனா கத்தார் நாட்டில் தங்கி பணிபுரிந்துவருவதாகவும், அங்கு ஜமுனாவை கொடுமைப்படுத்திவருவதால் உடனே மீட்டு ஒப்படைக்கக்கோரி பலமுறை தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் ஆட்சியர் எடுக்காததால் முதலமைச்சரைச் சந்தித்து மனு அளிக்க வந்ததாகக் கூறினார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.