சென்னை அனகாபுத்தூர் நேசமணி தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (54). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (டிச. 13 ) அனகாபுத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடைபயிற்சி செய்துகொண்டிருந்தார். அங்கு திடீரென வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சத்தியசீலனை இடிப்பது போல் சென்று அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி
அப்போது, திடீரென அந்த அடையாளம் தெரியாத நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சத்தியசீலன் அணிந்திருந்த தங்க கடுக்கன், அவரது இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். பின்னர் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் சத்தியசீலன் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபரைத் தேடி வந்தனர்.
கொள்ளையன் கைது
இந்நிலையில், அந்த அடையாளம் தெரியாத நபர் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த புனிதன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடமிருந்து தங்க கடுக்கன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் புனிதனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனைவியுடன் திருமணத்திற்கு வெளியேயான உறவில் இருந்தவரைக் கொன்றவருக்கு வலை!