இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இருசக்கர வாகனங்களை ரயில் மூலம் அனுப்புவதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதலில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்கை காலி செய்ய வேண்டும். மீண்டும் இருசக்கர வாகனத்தை இயக்கி, டேங்க் உட்புற வளைவுகளில் ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாததை உறுதி செய்ய வேண்டும். பெட்ரோல் டேங்க் மூடியை சிறிது நேரம் திறந்து வைத்து பெட்ரோல் காற்றில் உலர்வதையும் உறுதி செய்ய வேண்டும். இருசக்கர வாகனத்தை அனுப்புவோர் விண்ணப்ப படிவத்தில் பெட்ரோல் டேங்கில் பெட்ரோல் இல்லை என்பதை உறுதிமொழியாக அளிக்க வேண்டும். பார்சல் ரசீதிலும் இந்த உறுதிமொழியை ரயில்வே ஊழியர் பதிவு செய்வார்.
இருசக்கர வாகனத்தை ரயில்வே வரையறைப்படி நன்றாக பேக் செய்ய வேண்டும். இருசக்கர வாகன பதிவு செய்ய வரும்போது வாகனத்தின் ஆர்.சி.புக் அசலை காண்பித்து, நகலை ரயில்வே ஊழியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் ஒரு ரயிலில் கொண்டு வரப்பட்ட இருசக்கர வாகனம் தீ பிடித்ததால், புதிய விதிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என தென்னக ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.