2017ஆம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதிய 42 தேர்வர்கள் முறைகேடு செய்து அதிக மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதுவரை, குரூப் 2ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 16 நபர்களும், குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 16 நபர்கள் என மொத்தம் 32 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரியூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் நாரயணன் (36) என்பவர் கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரைக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தேர்சிபெற காவலர் பூபதியிடம் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் என்பதும் இவருக்கு தெரிந்த ஐந்து நபர்களுக்கும் சேர்த்து 34 லட்சம் ரூபாயை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றதும் தெரியவந்தது.
மேலும், இந்தப் பணத்தை பெற்ற பூபதி இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான ஜெயகுமாரிடம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல், குரூப் 2 ஏ தேர்வில் நாராயணன் என்பவர் தனது மனைவி மகாலட்சுமி முறைகேடாக தேர்ச்சி பெற பூபதியிடம் பணம் கொடுத்ததும் நாராயணன் மற்றும் பூபதி இணைந்து சுமார் ஆறு தேர்வர்களிடமிருந்து 74 லட்சம் ரூபாய் வரை பெற்று தேர்வில் தேர்ச்சி முறைகேடாக தேர்ச்சி பெற உதவியுள்ளனர் என்பதையும் சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதில், மகாலட்சுமி மட்டும் சான்றிதழ் சரிபார்பில் நிராகரிக்கப்பட்டுள்ளார். இதனால் முறைகேடாக தேர்ச்சி பெற பணம் கொடுத்த நாராயணனை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4 தேர்வு முறைகேட்டு வழக்கின் முக்கிய குற்றவாளி ஜெயகுமார் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் ஏழு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஜெயகுமார் எப்படி முறைகேட்டில் ஈடுப்பட்டார். இவரைத் தவிர வேறு குற்றவாளிகள் இந்த முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளனரா என்பது விசாரணையின் முடிவிலேயே தெரியவரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன்!