சென்னை: தரமணி தந்தை பெரியார் நகர், கருணாநிதி 3 ஆவது தெருவை சேர்ந்தவர் பிரவீன் (19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ஹரி (17) வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் +2 படித்து வந்தார்.
இந்நிலையில் சென்ற புதன் கிழமை (நவ.30) பிரவீனும், ஹரியும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். பிரவீன் வாகனத்தை ஓட்ட ஹரி பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். தரமணி 100 அடி சாலையில் அதிவேகமாக சென்ற போது ஹரி தனது செல்போனில் எவ்வளவு வேகத்தில் செல்கிறோம் என்பதை வீடியோ பதிவு செய்து கொண்டே சென்றுள்ளார்.
அப்போது தரமணி சந்திப்பு அருகே எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் இருந்து வந்த டாடா ஏஸ் லோடு வாகனம் திரும்ப முயன்றது. அப்போது வாகனம் மீது மோதாமல் இருக்க பிரவீன் இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கிண்டி போக்குவரத்து போலீசார் இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்றிரவே மருத்துவமனையில் பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் ஹரியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தரமணி, கட்டபொம்மன் தெருவை சேர்ந்த டாடா ஏஸ் லோடு வாகன ஓட்டுநர் குணசேகரன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பிரவீனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:ராட்சத கிரேன் மோதி அரசு பேருந்து சேதம்